தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த சேதுராமலிங்கம் என்பவர் தூத்துக்குடி கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார். அவர் ஏற்கனவே இருந்த பைக்கை விற்று அந்த பணம் போக மீதி பணத்திற்கு பைனான்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி கூறி பழைய பைக்கையும், அதன் ஆர்.சி. புத்தகத்தையும் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டது.
பின்னர் சில நாட்கள் கழித்து புகார்தாரர் மேற்சொன்ன நிறுவனத்தை அணுகிய போது உங்களுக்கு பைனான்ஸ் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கிடைக்கவில்லை என்றால் ஏற்கனவே என்னிடம் பெற்ற பழைய வாகனத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தினர் வாகனத்தை விற்று விட்டதாகவும், அந்தப் பணம் பைக் நிறுவனத்தின் கணக்கிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழைய வாகனத்தை விற்பனை செய்த தொகையான வாகனத்திற்கு ரூ.28,000, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.63,000ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.