காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

அந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-06-17 04:39 IST


திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை, பெங்களூருவில் டீ கடை வைத்து உள்ளார். இவருக்கு 2 மகள்கள். இவரது இளைய மகள் (வயது 17) திருவண்ணாமலை ஆர்ப்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.

அவர் பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்வதற்காக விண்ணப்பித்து உள்ளார். இதற்கிடையில் அந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழுமலை திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.

அப்போது தனது மகளின் காதல் விஷயம் தெரியவர நேற்று முன்தினம் ஏழுமலை, அவரிடம் சிறு வயதில் காதல் வேண்டாம், கல்லூரியில் சேர்த்து விடுகிறேன் ஒழுங்காக படி என்று கூறினார். இதனால் தந்தை-மகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இளம்பெண், ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணறு அருகில் வந்தார். பின்னர் அவர் காதலனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அங்கு வந்த வாலிபரிடம், நமது காதல் விஷயம் வீட்டில் தெரிந்து விட்டதால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அப்போது இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இளம்பென் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற அந்த வாலிபரும் கிணற்றில் குதித்தார். அந்த சமயத்தில் மகளை தேடி அங்கு வந்த ஏழுமலை 2 பேரும் கிணற்றில் குதிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கிணற்றில் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். இதில் ஏழுமலை, வாலிபரை மட்டும் காப்பாற்றினார். அவரது மகள் கிணற்றில் குதித்த வேகத்தில் ஆழத்திற்கு சென்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்