வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்ட பெண் கிராம உதவியாளர் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை
பெண் கிராம உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவருடைய மனைவி ஜாகிதா பேகம் (வயது 37). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறுதல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
நேற்று முன்தினம் ஜாகிதா பேகம் வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஜாகிதா பேகம், வீட்டில் உள்ள ஊஞ்சல் சங்கிலியில் தூக்குப்போட்டு கொண்டார்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த அவருடைய உறவினர் காதர்பீ, ஜாகிதா பேகம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாகிதா பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஜாகிதா பேகத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவருடைய கணவர் திருக்கோவிலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மனைவியின் இறப்புக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச்சுமை தான் காரணம் எனவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச்சுமை காரணமாக ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கிராம உதவியாளர் ஜாகிதா பேகத்தின் சாவுக்கு நீதி கேட்டு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, ஜாகிதா பேகத்தின் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.