காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்
காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம்,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.
அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.இதற்கிடையே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.