வேறு கல்லூரியில் படிக்க சொன்னதால் விரக்தி: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வேறு கல்லூரியில் படிக்க சொன்னதால் விரக்தி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
கோப்புப்படம்
கோவை சவுரிபாளையம் அய்யப்பன்கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (49 வயது). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய 2-வது மகள் ஸ்ரீஜா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆனால், சதீஷ்குமார், ஸ்ரீஜாவிடம் தனியார் கல்லூரியில் படித்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும். எனவே அரசு கல்லூரியில் இடம் வாங்கித் தருகிறேன். அங்கு சென்று படி என்று அவர் கூறியதாக தெரிகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீஜா, தனியார் கல்லூரியிலேயே தொடர்ந்து படிக்க விரும்புவதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சதீஷ்குமார் தனது மகளிடம் தாவரவியல் பாடத்துக்கு பதிலாக அரசு கல்லூரியில் உளவியல் படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் கவலை அடைந்த ஸ்ரீஜா, தனியார் கல்லூரியிலேயே படிக்க விரும்புவதாக தனது தாய், அக்காவிடம் கூறி உள்ளார். அதற்கு அவர்கள் ஆறுதல் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் விரக்தி அடைந்த ஸ்ரீஜா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.