செஞ்சிக் கோட்டைக்கு ‘செஞ்சியர்கோன் காடவன் கோட்டை' என்று பெயரிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
முனிவர் கொடுத்த புதையலைக் கொண்டு செஞ்சிக்கோட்டையை கட்டப்பட்டது என்பது கற்பனையாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
செஞ்சிக் கோட்டைக்கு அதனை கட்டிய அரசனின் பெயரான ‘செஞ்சியர்கோன் காடவன்’ கோட்டை என்று பெயரிட வேண்டும் என மத்திய தொல்லியல் துறையிடம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை என்பது காடவர்களின் கோட்டையாகும். கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழனைப் (கி.பி. 1118 - 1135) பற்றி இயற்றிய 'விக்கிரம சோழன் உலா' என்ற நூலே, செஞ்சிக்கோட்டையைப் பற்றிய பழமையான சான்றாகும். இதுவே, செஞ்சிக்கோட்டையின் அரசனான பல்லவர்கள் வம்சத்தை சார்ந்த செஞ்சியர் கோன் காடவன் பற்றி குறிப்பிடும் அடிப்படை வரலாற்றுச் சான்றாகும்.
இந்த செஞ்சியர்கோன் காடவ மன்னன், வளர்ந்தனார் காடவராயரின் (கி.பி. 1176-1112) மகன் ஆட்கொள்ளி காடவர் கோன் (கி.பி. 1113-1136) என்று, விருத்தாச்சலம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
செஞ்சியர் கோன் காடவர் வலிமையான கோட்டையையும், போர்ப்படை யானைகளையும் கொண்டிருந்தார் என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாற்றுப் புத்தகத்தில் "மத யானை செலுத்தும் காடவன் வலிமையான போர்க்களக் கோட்டையை உடைய செஞ்சியின் அரசன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கனகசபைப் பிள்ளை, பண்டிட் சோமசுந்தர தேசிகர், டாக்டர் எம்.எஸ்.கோவிந்தசாமி, பேராசிரியர் சுப்புராயலு, தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நடன.காசிநாதன், முனைவர் தங்கவேலு மற்றும் இல.தியாகராஜன் ஆகியோரும் காடவர்களை வன்னிய வம்சத்தவர் என்று பல்வேறு ஆய்வுகள், நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான வரலாற்றுக் குறிப்புகளும் ஆய்வுகளும், செஞ்சிக் கோட்டையை கட்டியவன் செஞ்சியர் கோன் காடவன் என்பதையும், அவன் வன்னியர் என்பதையும் தெளிவாக நிறுவுகின்றன. காடவர்கோன் கட்டியதற்கான அடிப்படை சான்றுகளை தவிர்த்துவிட்டு, நாராயணக் கோன் என்பவரால் எழுதப்பட்ட, 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஆனந்த கோன் (கி.பி.1200-1240) என்பவர், முனிவர் ஒருவர் கொடுத்த புதையலைக் கொண்டு செஞ்சிக்கோட்டையை கட்டினார் என்பது கற்பனையாகும்.
முறையான ஆய்வு செய்யாமல், தொல்லியல் துறையில் பணியாற்றும் அறிஞர்கள், செஞ்சிக் கோட்டையை ஆனந்த கோன் மரபினர் அமைத்தனர் என்றும், இவர்கள் செஞ்சியை 130 ஆண்டுகள் ஆண்டனர் என்றும் செஞ்சிக் கோட்டையில் தகவல் பலகை வைத்துள்ளனர்.
இது, முற்றிலும் அபத்தமான செயலாகும். இவை உடனடியாக சரி செய்யப்பட்டு செஞ்சிக்கோட்டையில், 'வன்னிய குல க்ஷத்ரியர்களான', 'காடவ மன்னர்களின் செஞ்சிக்கோட்டை' என்று தகவல் பலகை வைக்கவேண்டும். இதை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்யவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.