மீண்டும் எகிறத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆனது.;
சென்னை,
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.
இந்த சூழலில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று அதன் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195-ம், பவுனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 295-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்ச விலையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய விலை உயர்வு அதனையும் கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
தங்கத்தின் மீதான முதலீடு ஏற்கனவே அதிகரித்து வந்ததால், தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதனால் போர்ப்பதற்றம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரித்து, அதன் விலையும் ஏற்றம் கண்டு இருக்கிறது.