நீலகிரி: நகைகளை மீட்டு தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் தற்கொலை முயற்சி
நகைகளை மீட்டு தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றார்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவரே அந்தப் பெண். இவர் கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசித்து வரும் சந்திரிகா என்பவரிடம் 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இதுவரை 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பித் தரப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 5 பவுன் தங்க நகைகளை மீட்டுத் தர வேண்டும் என காயத்ரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காயத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்று உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த காயத்ரி, திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தலையிட்டு காயத்ரியை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.