கல்குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் அறிக்கை
விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.;
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, மல்லக்கோட்டையில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தக் குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் முருகானந்தம் (வயது 49), ஆறுமுகம்(50), ஆண்டிச்சாமி(50), கணேசன்(43) வட மாநிலத் தொழிலாளி ஹர்ஜித் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் காமயமடைந்த மைக்கேல்(43) மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கும், காயமடைந்த தொழிலாளர் குடும்பத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், நிவாரண நிதி வழங்கியுள்ளார். உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் 50 வயது, அதற்கும் குறைவான வயதுடையவர்கள். இவர்களது வருவாய் ஆதாரம் தான், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு, அறிவித்துள்ள நிவாரணத் தொகையை மேலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
விபத்துக்கள் ஏற்படும் போது உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண நிதி அறிவிப்பது ஆறுதல் அளிக்கும் என்றாலும், குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்த்து, கண்காணித்து வரும் தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு படுதோல்வி அடைந்திருப்பதை, தொடர்ந்து வரும் விபத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. மணல், கல்குவாரிகள், பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் என அடர்த்தியான விபத்துகளுக்கான தொழிலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். பூமிக்கு அடியில் 230 அடிக்கும் கீழே கற்களை வெட்டி எடுக்கக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் மல்லக்கோட்டை கல்குவாரியில் 450 அடிக்கும் மேல், கீழே இறங்கி வெடி வைக்கும்போது போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் அருகில் இருந்த குவாரியில் 350 அடிக்கும் கீழே ஆழத்தில் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தார்கள். தொடரும் விபத்துக்களை தடுக்கவும், தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்கவும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தடை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.