மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
நற்பண்புகளை வளர்க்கும் கல்வி மிக அவசியமானதாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்;
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உசிலம்பட்டி - செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி கல்லூரி விடுதியில் 15 வயதான மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து வெளியிட்ட அருவருப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள், குழந்தைகளின் மனநிலையையும், கல்வி பயிலும் சூழலையும் கடுமையாக பாதிக்கக்கூடியவை. மாணவர்களின் உரிமைகளையும், மரியாதையையும் சிதைக்கும் இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன். குழந்தைகள் பாதுகாப்பாகவும், நற்பண்புகள் நிறைந்த சூழலிலும் கல்வி கற்கும் உரிமையுடையவர்கள். அதனை உறுதி செய்வது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீதி போதனை வகுப்புகள் போல, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் நீதிபோதனை வகுப்புகள் கட்டாயம் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும். நல்ல கதைகள், பாடல்கள், விடுகதைகள், புதிர்கள் போன்றவற்றின் மூலம் மாணவர்களுக்கு நற்பண்புகள், ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றை விதைப்பது காலத்தின் தேவை.
மாணவர்களின் மனதையும், உடலையும் பாழ்படுத்தும் சமூக வலைத்தளங்கள், தவறான விளம்பரங்கள், ஒழுக்கக்கேடான இணைய தளங்கள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நற்பண்புகளை வளர்க்கும் கல்வி மிக அவசியமானதாகும்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பையும், சுயமரியாதையையும் உறுதி செய்ய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் இனி நடைபெறாமல் தடுக்க, மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என கண்காணித்து, அவர்களின் மன உறுதியும், சமூக நற்பண்புகளும் வளர்க்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .