28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு: 49 மையங்களில் 14,305 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.;

Update:2025-09-26 20:22 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 28.9.2025 அன்று நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II மற்றும் IIA தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II & IIA தேர்வுகள் 28.9.2025 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 49 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி வட்டத்தில் 24 மையங்களில் 7,379 பேரும், கோவில்பட்டி வட்டத்தில் 15 மையங்களில் 4,219 பேரும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 3 மையங்களில் 627 பேரும், திருச்செந்தூர் வட்டத்தில் 7 மையங்களில் 2,080 பேரும் என மொத்தம் 49 மையங்களில் 14,305 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வு பணிக்கென துணை வட்டாட்சியர் நிலையில் 14 இயங்கு குழுக்களும் (Mobile Team), துணை ஆட்சியர் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்களும், 7 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம், கருவூலத் துறை, பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறை ஆகிய தொடர்பு துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பேசினார்.

மேலும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 28.9.2025 அன்று காலை 9 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான முற்பகல் 9 மணிக்கு பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன். கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்