ஜி.எஸ்.டி. வரி குறைப்பு - எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.;

Update:2025-09-04 12:59 IST

சென்னை,

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. .

நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.

அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைவினைப்பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அதிமுக சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடி அவர்களுக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜிஎஸ்டி கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் எனது நன்றி.

அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்குவது எளிமை, நியாயத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. , நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும். என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்