காவலாளி அஜித்குமார் மரணம்: போலீஸ் அனுமதி மறுப்பால் த.வெ.க. ஆர்ப்பாட்டம் 6ம்தேதிக்கு தள்ளிவைப்பு

காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.;

Update:2025-07-02 16:57 IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து விஜய் அறிவுறுத்தலின்பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை த.வெ.க. ெபாதுச் செயலாளர் என்.ஆனந்த் தொடர்பு ெகாண்டு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மடப்புரம் கோவில் காவலர் அஜீத்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நாளை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என கூறியிருந்தார்.

போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு முறைப்படி கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த போலீசார் நாளை எழும்பூரில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, "கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சிவானந்தா சாலையில்) வருகிற 6.7.2025, ஞாயிறு அன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்