சென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.;
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, சென்டிரல், கோயம்பேடு, எழும்பூர், வண்ணாரப்பேட்டை, புரசவைவாக்கம், நுங்கம் பாக்கம், மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், விருகம்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர், புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், போரூர், மேடவாக்கம், கீழ்கட்டளை, கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 25-ந்தேதி ஒடிசா - மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால், இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.