காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.;
சேலம்,
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 374 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 6-வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளது.