கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.;
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த மாதம் 27-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய டிட்வா புயல், தமிழகத்தின் கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்தது.
அதனை தொடர்ந்து கடந்த 28-ந்தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றின் வேகம் மணிக்கு சுமார் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரை வீசியது. அதே சமயம், டிட்வா புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடி, கடல் பகுதியிலேயே வலுவிழந்துவிடும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், வேளாண் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.