எஸ்.ஐ.ஆர். படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தமிழக தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்களை பி.எல்.ஓ.க்களாக (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்) நியமித்துள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவத்தை வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டினார்கள். எனவே, கணக்கீட்டுப் படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணவும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்ற விவரத்தை கண்டறியவும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.