சாலையின் நடுவே கொடிக்கம்பம் வைக்கும் அரசியல் கட்சிகள் - ஐகோர்ட்டு அதிருப்தி
சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் இருந்தது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.;
சென்னை,
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலைகளின் நடுவே உள்ள சென்ட்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் இருந்தது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து, அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.