பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்பனை: தோட்டக்கலை துறை அலுவலர் உள்பட 3 பேர் கைது

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்றதாக கூடலூர் தோட்டக்கலைத் துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-02-23 13:11 IST

கூடலூர் தோட்டக்கலைத்துறை அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக ஏராளமான பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் குழாய்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் அலுவலக வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குழாய்கள் பெரும்பாலானவை மாயமாகின. இது குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷபிலாமேரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 150 பிளாஸ்டிக் குழாய்களை திருடி தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் என்பவர் பந்தலூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு விற்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கூடலூர் தோட்டக்கலைத்துறை அலுவலர் தயானந்தன் (வயது 33), விவசாயி சதானந்தன் (40), டிரைவர் முத்துக்குமார் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்