ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது நண்பரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.;
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா (வயது 27). இவரது நண்பர் இமாமுதீன் (20). இருவரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், இவர்கள் இருவரையும் ஆட்டோவில் கடத்திச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்திவிட்டு இருவரையும் சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அரும்பாக்கம், ஜெய் நகரை சேர்ந்த சங்கர்(42), இப்ராகிம்(31), கார்த்திக்(27) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் பணம், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதான இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மதுகுடிப்பதற்கு பணம் இல்லாததால் ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்திச்சென்று அடித்து உதைத்து பணம் பறித்தது தெரிந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.