பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் கிடந்த மனித எலும்புகள் - சென்னையில் பரபரப்பு
மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை போலீசார் பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.;
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18-வது கேட்டின் அருகில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அந்த அடைப்பை சரி செய்வதற்காக கழிவுநீர் தொட்டியை திறந்து நவீன எந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் மனித மண்டை ஓடு மற்றும் நீளமான 2 எலும்புகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை பறிமுதல் செய்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் யாருடையது? யாராவது குடிபோதையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது யாராவது அவரை கொலை செய்து விட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் வீசி சென்றதால் உடல் அழுகி எலும்புக்கூடானதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள மண்டை ஓடு, எலும்புகள் சோதனை செய்யப்பட்ட பிறகு அதன் அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.