ஆபாசமாக படம் பிடித்து வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர்... இளம்பெண் தற்கொலை
இளம்பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து, வரதட்சணை தராவிட்டால் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக அவரது கணவரே மிரட்டியுள்ளார்.;
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (30 வயது), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது.
வரதட்சணை தொடர்பாக மணமகன், மணமகள் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்கா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி இரண்டரை மாதமே ஆன நிலையில் பிரியங்கா இறந்ததால் அவரது சாவு குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே பிரியங்காவின் தற்கொலை குறித்து அவரது தாயார் சுமதி போலீசில் பகீர் புகார் அளித்துள்ளார். அதில், "மகளின் திருமணத்தின்போது 10 பவுன் நகை வரதட்சணையாக கொடுப்பதாக கூறினோம். ஆனால் 5 பவுன் மட்டுமே அப்போது கொடுக்க முடிந்தது. அதனால் எனது மகளை ஆபாசமாக படம் பிடித்து வைத்துக்கொண்டு, மீதி 5 பவுன் தராவிட்டால், அந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக அவரது கணவரே மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த எனது மகள் தற்கொலை செய்துகொண்டார். ஆகவே அவரது தற்கொலைக்கு காரணமான கணவர் உள்பட அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.