நிம்மதியாக இருக்கிறேன்... இதிலேயே பயணிக்க விரும்புகிறேன்: அண்ணாமலை
ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார் என்று அண்ணாமலை கூறினார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய இணை மந்திரி பதவி வரும்போது பெற்றுக் கொள்வேன். தற்போது, கூண்டுக் கிழியாக இருக்க விரும்பவில்லை. ஆடு, மாடுகளோடு இருக்கிறேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோவிலுக்கு போறேன். உலகம் முழுவதும் சுற்றுவதற்கு இது ஒரு வாய்ப்பு. கட்சி பணிகளை அவ்வப்போது செய்கிறேன்.
தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. குழந்தைகளோடு நேரத்தை செலவிடுகிறேன். தாய்-தந்தையோடு அமர்ந்து சாப்பிடுகிறேன்.. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய விரும்புகிறேன். என்னுடைய ஆசை பெரியது.
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான காலம் வரும். அதுவரை தொண்டனாக பணி செய்வேன். ஜனாதிபதியின் குறிப்பு அரசமைப்பு பிரிவு 143-ஐ பயன்படுத்தி திரவுபதி முர்மு கேள்ளி எழுப்பி உள்ளார். அது சரியே. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில் தான் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வரும்போது ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசுவார். பிரதமர் மோடியின் இதயத்தில் அவருக்கு தனி இடம் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.