விளையாட்டாக செய்து விட்டேன்... ஓடும் ரெயிலில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்பெண் மன்னிப்பு கேட்டார்

நான் தவறை உணர்ந்துவிட்டேன்; ஆபத்தான ரீல்ஸை எடுக்காதீர்கள் என்று இளம்பெண் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-03 06:48 IST

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகர பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஆடிப்பாடி 'ரீல்ஸ்' செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஆபத்தை உணராமல் இளம்பெண் எடுத்திருந்த இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்தனர். இதனால் அந்த 'ரீல்ஸ்' வைரலானது. ஆனால் 'ரீல்ஸை' பார்த்த பலரும் அந்த இளம்பெண்ணின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் செயலை பார்த்து மற்றவர்களும் இதுபோன்ற ஆபத்தான முறையில் 'ரீல்ஸ்' செய்ய வாய்ப்பு இருப்பதால் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் செய்த செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு இளம்பெண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கைகூப்பி வணங்கியபடி அந்த இளம்பெண் வீடியோவில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் வணக்கம். நான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தேன். அதை நான் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் செய்தேன். அது இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எப்போதும் 'ரீல்ஸ்' செய்வேன். ஆனால் தற்போது வெளியிட்ட 'ரீல்ஸ்' பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. வெளியே தலை காட்ட முடியவில்லை.

நான் செய்தது தவறு தான். எனக்கே தெரியாமல் விளையாட்டு தனமாக செய்துவிட்டேன். பிரச்சினை வந்த பிறகு வீடியோவை நீக்கிவிட்டேன். எல்லோரும் என்னால் கெட்டுப்போவார்கள் என்றும் கூறுகிறார்கள். நான் தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்று யாரும் தயவு செய்து 'ரீல்ஸ்' செய்யாதீர்கள். இதனால் நிறைய ஆபத்து உண்டு. நான் 'ரீல்ஸ்' செய்தபோது தவறி விழுந்திருக்கலாம். கீழே விழுந்து மரணம் அல்லது கை, கால் போயிருக்கலாம். எனவே இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸை எடுக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரெயிலில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண் யார்? ரெயிலில் எப்போது பயணம் செய்தார்? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாகர்கோவில் மேல ராமன்புதூர் பகுதியை சேர்ந்த சகிலாபானு (வயது 30) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், " 2 பிரிவுகளில் சகிலாபானு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாமக்கல்லில் இருந்து பயணம் செய்துள்ளார். அவ்வாறு வந்தபோது ரெயிலில் 'ரீல்ஸ்' எடுத்துள்ளார்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்