‘சும்மா எதையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அதை செய்யாமல் விட மாட்டேன்’ - விஜய்

நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான் என்று விஜய் தெரிவித்தார்.;

Update:2025-11-23 12:38 IST

காஞ்சீபுரம்,

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட விஜய், 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது;-

Advertising
Advertising

“மக்களுக்காக மக்களின் பிரச்சினைகளை எடுத்து பேசுவதால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நம் மீது எரிச்சல் வரத்தானே செய்யும். அதனால் தான் சட்டசபையில் ஆரம்பித்து மேடைக்கு மேடை த.வெ.க. மீது அவதூறு கூறுகிறார்கள். இதற்கெல்லாம் நிச்சயம் நாங்கள் பதில் சொல்வோம்.

நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன். ‘வந்தால்..’ என்று சொல்லத் தேவையில்லை, வருவோம்.. மக்கள் நம்மை வர வைப்பார்கள். ஏனெனில் மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்கத்தானே செய்வார்கள்.

எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும். தரம்தான் நமது லட்சியம். அதற்கான வசதி வாய்ப்பை உருவாக்கும் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும், நிரந்தர வேலைவாய்ப்பு இருக்க வேண்டும், அதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அதற்கு தகுந்தவாறு கல்வியில் பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் பயம் இல்லாமல் செல்லும் அளவிற்கு மாற்ற வேண்டும். பருவமழை காலத்தில் வெள்ளத்தால் மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு 4 ஆயிரம் கோடி திட்டம் என்று ஏமாற்றாமல், உண்மையான பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு அவர்களுக்கான வளர்ச்சி திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக தொழில் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.

இவற்றை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை நமது தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரிவிப்போம். மற்றவர்களைப் போல் சும்மா பேசிவிட்டு ஏமாற்றும் வேலை எல்லாம் இங்கு கிடையாது. நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான். எங்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

நமது அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்லவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். அதில் எந்த குழப்பமும் கிடையாது. நாம் சும்மா எதையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அதை செய்யாமல் விட மாட்டேன். அது மக்களுக்கு நன்றாக தெரியும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்