‘தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான்’ - மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேச்சு
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என விஜய் தெரிவித்தார்.;
காஞ்சீபுரம்,
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட விஜய், 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது;-
“நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்த இடம்தான் இந்த காஞ்சீபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த அந்த கட்சியை, அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம், ஆனால் நாம் அப்படி இல்லை.
நம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் நடிப்பவர்கள் நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? இதை காஞ்சி மண்ணில் இருந்து நான் சொல்வதற்கு காரணம், நமது முதல் களப்பயணம் தொடங்கியதே பரந்தூரில் இருந்துதான். அந்த மக்களுக்காக நாம் கேள்விகளை கேட்டதும் இதே மண்ணில் இருந்துதான். இன்று ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்சிக்கு நான் வந்திருக்கும் இடமும் அதே காஞ்சீபுரம் மாவட்டம்தான்.
நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக நாம் எல்லா நல்லதையும் செய்ய வேண்டும், அதையும் சட்டப்பூர்வமாக, மனப்பூர்வமாக, அங்கீகாரத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் தான் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை கையில் எடுத்தோம்.
நமக்கு கொள்கை இல்லை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்கிறார். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவத்தை நமது கட்சியின் அடிப்படை கோட்பாடாக அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? சி.ஏ.ஏ. அறிவிப்பை எதிர்த்த நமக்கு, வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா?
நீட்டை ஒழித்துவிடுவோம் என்று கதை விடாமல், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு, அதற்கு ஒரு இடைக்கால தீர்வையும் சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? இவர்கள் மட்டும்தான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்தது போல் பேசுகிறார்கள். தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டார்களா?”
இவ்வாறு விஜய் பேசினார்.