சென்னை ஓட்டல்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.;

Update:2025-06-20 08:24 IST

சென்னை,

கேரளாவை தலைமையிடமாக கொண்ட 'சீ ஷெல்' ஓட்டல்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் அரபுநாடுகளில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த குன்ஹி மூசா என்பவர் இந்த ஓட்டல்களை நடத்தி வருகிறார்.

அரேபியன் உணவுகளுக்கு பிரபலமான இந்த ஓட்டல்களில் வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழகம் குறிப்பாக சென்னையில் உள்ள இந்த ஓட்டல்களில் நேற்று முன்தினம் வருமானவரி சோதனை நடைபெற்றது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டல் நிறுவனத்தின் தலைமையிடம் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் கேரள மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரியில் 2 இடங்கள், பெருங்குடி இந்திரா நகர், துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி, துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை ஆகிய 5 இடங்களில் உள்ள 'சீ ஷெல்' உணவகம் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள குடியிருப்பு என மொத்தம் 6 இடங்களில் சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் 8 குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர்.

அதனை தொடர்ந்து இந்த ஓட்டல்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிரபல உணவகம் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா நகர், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் பிரபல தனியார் உணவக கிளைகளில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்