கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா திரும்பப்பெற வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடுகளை இந்தியா விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.;

Update:2025-07-23 13:18 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது முதல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு மத்தியில் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 2025-ம் ஆண்டில் மட்டும் 150 க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் கைது மற்றும் தாக்குதலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மாநிலங்களவை பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்