அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் செய்வதாக இழிவுபடுத்துவதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வினரின் ஆணவப்போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தேனி மாவட்டம் மண்ணூத்து பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன், "மக்களின் மனம் அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று மகளிர் விடியல் பயணத் திட்டம். நான் முன்பு கூறியதுபோல், பெண்கள் அனைவரும் அரசு பஸ்சில் 'ஓசி'யில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும்" என்று கூறினார்.
கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வதை 'ஓசி' என்று விமர்சித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது.
மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் தி.மு.க.விற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.