மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம் மனைவி சென்னம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் சாலையோரம் கிடந்த காலி மதுபாட்டில்களை சாக்கு பையில் பொறுக்கி கொண்டிருந்திருந்தார். அப்போது அவரிடம் அவ்வழியாக வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குறிப்பிட்ட இடத்தை காட்டி அந்த பகுதியில் நிறைய காலிபாட்டில்கள் கிடைக்கிறது என்று கூறி அவரை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.
பின்னர் அந்த மர்மநபர் சென்னம்மாள் காதில் அணிந்திருந்த தங்கத்தோடு, சுருக்கு பையில் வைத்திருந்த ரூ.4,700 ரொக்கத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று வி்ட்டார். இதனால் அதிா்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். மர்ம நபர் சென்னமாளின் காதில் அணிந்திருந்த தங்க தோடுகளை அவசர அசரமாக கழற்றியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அரகண்டநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.