அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்கும் பின்னலாடை நிறுவனங்கள்
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.;
சென்னை,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று (புதன்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. எனவே, இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் சிக்கலை சந்தித்துள்ளன. திருப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு மட்டும் ஓராண்டுக்கு 30 சதவீதம் பின்னாலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 10 டாலருக்கு விற்கப்பட்ட பின்னலாடையை தற்போது 16 முதல் 18 டாலருக்கு ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் இந்திய பின்னலாடைகளை இறக்குமதி செய்வதை அமெரிக்க வர்த்தகர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். பின்னலாடைகள் தேங்குவதைத் தடுக்க உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும் இந்த புதிய வரியால் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வரையும் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பின்னலாடை தயாரிப்புக்கு சிறப்பு பெற்ற திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள். சாய ஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பவர்டேபிள், காஜா பட்டன் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாளொன்றுக்கு ரூ.200 கோடிக்கு ஆடை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.