நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்: ரிதன்யா தந்தை பேட்டி

மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன் என்று ரிதன்யாவின் தந்தை கூறினார்.;

Update:2025-08-23 17:35 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் ஜாமீன் மனு போட்டிருந்தார்கள்.. நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் ஜாமீன் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அங்கும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால், ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் கொடுத்துவிட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம்.

அதேநேரம் ஐகோர்ட்டில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டு ரிட் மனு போட்டிருக்கிறோம். அந்த வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது.. அந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சட்டத்தை நம்புகிறேன். நீதியரசர்களை நம்புகிறேன்.. தமிழக அரசிடமும் முறையிட்டுள்ளோம். அவர்களும் நீதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள். என் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்