சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற சென்னை நாளில் உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னைதான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-22 14:44 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தென்னிந்தியாவின் தலைநகரமாக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 386-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்புதான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது.

சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னைதான். ஆனால், சென்னையை வாழத்தகுதியற்ற மாநிலமாக மாற்றியதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் சாதனை. கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம் என்பது தான் இன்றைய சென்னையின் அடையாளமாக மாறியிருக்கிறது. சென்னையின் சாலைகளில் பயணம் செய்வதே சாகசமாக மாறியிருக்கிறது. அத்தனைக்கும் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையும், அளவில்லாத ஆசையும்தான்.

இந்த நிலையை மாற்றி சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்றுவதுதான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்