தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே நோக்குக் கடிதம் கையெழுத்து
முதலீட்டாளர் இணைப்புகள் மற்றும் இணை கல்வி வலையமைப்புகளும் இதன் மூலம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை, அக்டோபர் 9, 2025: இந்தியாவின் முதல் வலையமைப்பான தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT Hub), ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் உடன் இன்று நோக்குக் கடிதத்தில் (LoI) கையெழுத்திட்டது. இந்நிகழ்வு, தமிழ்நாட்டின் புத்தாக்க சூழலையும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் புதுமை அமைப்பையும் இணைக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது.
இந்த நோக்குக் கடிதம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்அப்புகள், புதுமையாளர்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோருக்கிடையில் நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் இரு நாடுகளின் புத்தாக்க சூழலை வலுப்படுத்துகிறது.
இந்நிகழ்வில், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் உப துணைவேந்தர் (உலகளாவிய கலாச்சாரம் மற்றும் ஈடுபாடு) பேராசிரியர் மைக்கேல் வெஸ்லி, மற்றும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (iTNT Hub) தலைமை செயல் அலுவலர் வனிதா வேணுகோபால் ஆகியோர் நோக்குக் கடிதத்தை பரிமாறிக்கொண்டனர். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆஸ்திரேலியாவின் தலைமைத் தூதர் சிலை ஜாகி, மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலர் ப்ரஜேந்திர நவ்நித், ஐ.ஏ.எஸ். ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT Hub), செயற்கை நுண்ணறிவு (AI/ML), விரிவான மற்றும் மெய்நிகர் உண்மை (AR/VR), பொருள்களின் இணையம் (IoT), ரோபோட்டிக்ஸ், செமிகண்டக்டர் மற்றும் குவாண்டம் கணினி ஆகிய முன்நிலை தொழில்நுட்பங்களை முன்னெடுத்து, ஸ்டார்ட்அப்புகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு புத்தாக்க மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் தளமாக செயல்படுகிறது.
வனிதா வேணுகோபால் கூறியதாவது: “தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT) – மெல்போர்ன் பல்கலைக்கழக இணைப்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் ஸ்டார்ட்அப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைகளை இணைக்கும் வலுவான புத்தாக்க சூழலை உருவாக்கும். இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டு வளர்ச்சி முடக்கத் திட்டம் (Acceleration) திட்டங்களை வடிவமைத்து, ஸ்டார்ட்அப்புகள் மற்றும் வழிகாட்டிகளுக்கிடையேயான பரிமாற்றங்களை ஊக்குவித்து, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்க உள்ளன. முதலீட்டாளர் இணைப்புகள் மற்றும் இணை கல்வி வலையமைப்புகளும் இதன் மூலம் மேம்படுத்தப்படும்.,” என தெரிவித்தார்.
மெல்போன் பல்கலைக்கழகத்தின் உப துணைவேந்தர்பேராசிரியர் மைக்கேல் வெஸ்லி கூறியதாவது:
“மெல்போர்ன் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையமும் (iTNT Hub) இணைந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சந்திக்கும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இரு அமைப்புகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, புத்தாக்க மற்றும் இணை உருவாக்கத்திற்கு வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்புகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும் முடியும். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் புத்தாக்க அமைப்பு உலகளவில் விரிவடைந்து, மேலும் பல கூட்டாண்மைகளை உருவாக்கும் என்பது எங்களின் நோக்கம்,” என உப துணைவேந்தர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.