விருதுநகர் அருகே லாரி - ஆம்னி பஸ் மோதி விபத்து: பேருந்து முற்றிலும் எரிந்து சேதம்
விருதுநகர் அருகே சாத்தூர் செல்லும் நான்கு வழிச் சாலையில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்னி பஸ் முற்றிலும் எரிந்தது.;
விருதுநகர்,
விருதுநகர் அருகே சாத்தூர் செல்லும் நான்கு வழிச் சாலையில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்னி பஸ் முற்றிலும் எரிந்தது. விருதுநகர் அருகே ஆர்ஆர்நகரில் இருந்து சிமெண்டு மூடைகள் ஏற்றிய லாரி ஒன்று தென்காசி நோக்கி புறப்பட்டது. லாரியை சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராகவன் (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார். சேவை சாலையில் இருந்து மெயின் ரோட்டில் ஏறிய போது, சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகள் இல்லாமல் சென்ற தனியார் ஆம்னி பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரியும் ஆம்னி பஸ்சும் தீப்பற்றி எரிந்தன. லாரி ஓட்டுநர் ராகவன், ஆம்னி பஸ் ஓட்டுனர் கணேசன்(25) தீக்காயம் அடைந்தார். ஆம்னி பஸ் ஓட்டுநர் உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கியதால் சிறிய காயத்துடன் தப்பினார். காயமடைந்த லாரி ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆம்னி பஸ் டிரைவர் கணேசன், சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் விருதுநகர், சாத்தூரில் இருந்து விரைந்து சென்று லாரி மற்றும் ஆம்னி பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.