மெட்ரோ ரெயில் பாலம் விபத்து விசாரணை நிறைவு - இன்று அறிக்கை தாக்கல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.;
சென்னை,
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 118 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் 44.6 கிலோ மீட்டர் உடையது. இந்த வழித்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் வரையிலான உயர்மட்ட பாலப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த உயர்மட்டப்பாதையின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், போரூர் - நந்தம்பாக்கம் வரை இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி இரவு நந்தம்பாக்கத்தில், ராட்சத கான்கிரீட் பாலம் (கர்டர்) திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ரமேஷ் என்ற நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும், நந்தம்பாக்கம் போலீசாரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் கடந்த 5 நாட்களாக 26 பேரிடம் நடைபெற்று வந்த விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, விசாரணை அறிக்கையை அதற்கான குழு தயார் செய்துள்ளது. இன்று காலை சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் சித்திக்கிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கையின் முடிவுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.