மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி: கோவை, திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு
முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.;
திருப்பூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை, நாளை மறுநாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இரு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வதுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இருந்து தனது கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், 2 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியதுடன் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு கூறினர்.
இதனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், முதல்-அமைச்சரின் கோவை, திருப்பூர் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்-அமைச்சரின் திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.