ராதாபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டரங்கம் - உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.;
ரூ.18.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டரங்கம் மற்றும் புதுக்கோட்டை பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள், பல்நோக்கு விளையாட்டரங்கம், விளையாட்டு விடுதி கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடந்த அரசு விழாவில், திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையிலும், ஆர்வத்துடனும் உள்ளனர். அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காகவும், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ஒரு விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனடிப்படையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், விஜயபாதி கிராமத்தில் 14.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு பயிற்சி கூடம், உள்ளரங்க கையுந்துபந்து மைதானம், உள்ளரங்க இறகுப்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், தடகள பாதை, நீளம் தாண்டுதல், கால்பந்து மைதானம், கூடைபந்து, கபாடி, கோ-கோ, மற்றும் கைப்பந்து ஆடுகளங்கள், கேலரி வசதி, உடை மாற்றும் அறை மற்றும் சுற்று சுவர் ஆகிய வசதிகளுடன் பயிற்சி மையத்துடன் கூடிய பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 3.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தில் கூடுதல் பணிகளாக இறகுப்பந்து செயற்கை ஆடுகளம், குடிநீர் வசதி, ஒளிரும் மின்விளக்குகள் வசதி, உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இன்றைய தினம் மொத்தம் 18.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.