திண்டிவனத்தில் பரபரப்பு.. பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நகராட்சி ஊழியர் - 10 பேர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க. பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து நகராட்சி ஊழியர் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.;
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முனியப்பன் (வயது 36). இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி நேற்று முன்தினம் இரவு வெளியானது. அந்த காட்சியில் ஆணையர் அறையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் ரம்யா உள்பட பலர் இருந்தனர். அப்போது, இளநிலை உதவியாளர் முனியப்பன் திடீரென, கவுன்சிலர் ரம்யாவின் அருகே சென்று அவரது காலில் விழுந்தார்.
தொடர்ந்து அவர் முன்பு கையெடுத்து கும்பிட்டு பேசுவது போன்ற வீடியோ பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருவதுடன், கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்த திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு, வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நகராட்சி உதவியாளர் முனியப்பனை காலில் விழச்செய்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக முனியப்பன் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “சம்பவத்தன்று நான் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, 20-வது வார்டு பெண் கவுன்சிலர் ரம்யா ராஜா அங்கு வந்து, தெரு விளக்குகள் பழுதுபார்ப்பு தொடர்பாக 2021-ம் ஆண்டுக்கான கோப்பை எடுத்து தரும்படி கேட்டார். அந்த கோப்புகளை நான் தேடிக் கொண்டிருந்தபோது, நான் கூறிய பதிவேட்டை இன்னும் எடுக்கவில்லையா என்றார். நான் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு, என்னை திட்டினார்.
பின்னர், நேற்று முன்தினம் 11 மணியளவில் ரம்யாவுடன் அடையாளம் தெரிந்த 4 பேர் என்னுடைய பணியிடத்திற்கு வந்து மிரட்டினார்கள். இதை தொடர்ந்து ரம்யாவின் கணவர் ராஜா உன்னை தீர்த்துக் கட்டி விடுவேன் என்று என்னை மிரட்டினார். மேலும் ரம்யா, ராஜா ஆகியோர் சாதிப் பெயரைச் சொல்லி என்னை இழிவாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் நான் பணியில் இருந்தபோது திண்டிவனம் நகராட்சி ஆணையர் அறைக்கு நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் (தி.மு.க.) அழைக்கிறார் என்று சக ஊழியர்கள் வந்து என்னிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு நான் சென்றேன். அப்போது அந்த அறையில் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ரம்யா, நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். என்னிடம் கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்டு, ரம்யாவிடம் மன்னிப்பு கேள் என்றார். இதனால் கட்டாயத்தின் பேரில் ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ரம்யா, அவரது கணவர் ராஜா, நகரமன்ற தலைவரின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகளான நெடுமாறன், பழனி, திலகவதி, செந்தில்குமார், ஆனந்தன் மற்றும் காமராஜ், பிர்லா செல்வம் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.