நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு கடந்த 11-ந்தேதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நல்லகண்ணு மீண்டும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை என்றும் தெரிகிறது. விரைவில் அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.