நெல்லை: தாமிரபரணி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

யாரேனும் கோவிலில் இருந்து கடத்தி வந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-04 08:43 IST

நெல்லை,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே சக்திகுளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் பழமைவாய்ந்த 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததைப் பார்த்து அவற்றை வெளியே எடுத்து வந்தனர். சுமார் 2 அடி உயரத்தில் ஒரு சிலையும், 1 அடி உயரத்தில் 2 சிலைகளும் இருந்தன. 2 அடி உயர சிலையானது காளை மாட்டின் மீது அம்பாள் நான்கு கரங்களுடனும், சங்கு ஏந்தியவாறு இருந்தது.

ஒரு அடி உயர சிலையானது அம்மன் ஐந்து முகங்களுடன் வீற்றிருப்பது போன்று இருந்தது. மற்றொரு ஒரு அடி உயர சிலையானது பெண் தெய்வம் நின்றவாறு இருந்தது. மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய்த்துறையினர் விரைந்து சென்று, ஐம்பொன் சிலைகளை மீட்டனர். பின்னர் அவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பழமைவாய்ந்த ஐம்பொன் சிலைகளை வேறு எங்கேனும் கோவிலில் இருந்து மர்மநபர்கள் திருடி வந்தனரா?, பின்னர் போலீசாருக்கு பயந்து அவற்றை ஆற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்