நெல்லை: கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.;
கோப்புப்படம்
நெல்லை,
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
"திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனபரப்பு 2548.94 ஏக்கர் நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடி செய்வதற்கு 13.06.2025 முதல் 10.10.2025 முடிய 120 நாட்களுக்கு, வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடவும், நீர்த்தேக்கத்தில் இருந்து கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் மற்றும் நான்குநேரி வட்டங்களில் உள்ள மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம், ஏர்வாடி, ராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம் கிராமங்களில் உள்ள 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.