கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மு.க. முத்துவின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.;

Update:2025-07-19 12:56 IST

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.

அவருக்கு அறிவுநிதி என்றொரு மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். மறைந்த மு.க. முத்து உடலுக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடைய மறைவை தொடர்ந்து, முதல்-அமைச்சர் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனையடுத்து, தி.மு.க.வில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, மு.க. முத்துவின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சரான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மு.க. முத்துவின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர் மு.க. முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்