நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி
கரடியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்து உள்ளது. குறிப்பாக கரடிகள் உணவு தேடி வந்து செல்கின்றன. இதனிடையே குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியில் கரடி ஒன்று புகுந்தது. அங்கு உணவு ஏதேனும் இருக்கிறதா என தேடியது.
5 நிமிடம் அப்பகுதியில் கரடி சுற்றி வந்தது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. எனவே, கரடியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.