நீலகிரி: யானைகள் நடமாடும் பகுதியில் மயக்கத்தில் போதை ஆசாமிகள்
மக்கள் பணிகளை முடித்துக் கொண்டு விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வனத்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட போஸ் பாரா பகுதியில் காட்டு யானைகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக வலம் வரும்.
ஆனால், யானைகளால் நேரும் ஆபத்தை உணராத போதை ஆசாமிகள், இரவு நேரத்தில் வனப்பகுதியில் மது அருந்திவிட்டு போதையில் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். யானைகளால் போதை ஆசாமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதேபோல், புளியம்பாறை, ஓவேலி உள்பட பல இடங்களிலும் இரவில் மது போதையில் ஆசாமிகள் ஆங்காங்கே படுத்து உறங்குகின்றனர். இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து வந்து, போதை ஆசாமிகள் யாராவது தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பணிகளை முடித்துக் கொண்டு விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வனத்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.