நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி, ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிப்பு

நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிக்கப்பட்டது.;

Update:2025-11-18 09:44 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி பகுதியில் யானை வழித்தடங்களில் விடுதிகள் கட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் குழு கடந்த காலங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து யானை வழித்தடங்களில் உள்ள விடுதிகள் அடையாளம் காணப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த காலன் என்பவர், அதே பகுதியில் யானை வழித்தடத்தில் விடுதி கட்டப்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவது என முடிவு செய்தனர். இந்தநிலையில் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தலைமையில் வருவாய்த்துறை, போலீசார், வனத்துறையினர் இணைந்து வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட பெங்களூருவை சேர்ந்த திவாக ரத்தினம் என்பவரது விடுதி கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றினர்.

தொடர்ந்து யானை வழித்தடத்தில் கட்டிடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் யானை வழித்தடத்தில் 1,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்