அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது; எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு

ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்;

Update:2025-09-15 21:24 IST

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

அதிமுகவை சிலர் அழிக்க பார்த்தார்கள். அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம். அதில் இம்மியளவுகூட விட்டுக்கொடுக்கமாட்டேன். சிலரை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அந்த கைக்கூலிகள் யார் என்று அடையாளம் கண்டுகொண்டுவிட்டோம்.

அந்த கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். சிலர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை மன்னித்து, அரவணைத்து துணை முதல்-அமைச்சர் என்ற உயர்ந்த பதவி கொடுத்தோம். மீண்டும் அவர்கள் திருந்தவில்லை.

அதிமுகவின் கோவிலாக இருக்கும் தலைமை கழகத்தை அடித்து நொறுக்கினர். அவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டுமா? அதிமுக தலைமை கழகம் தொண்டனின் சொத்து. அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்.எல்.ஏ.க்களை இன்னொருவர் கடத்திச்சென்றார். அவர்களையும் அதிமுகவில் சேர்க்க வேண்டுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது. எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் அவர் நடுரோட்டில்தான் நிற்பார். அதிமுகவில் நான் தொண்டனாக இருந்து உயர்ந்துள்ளேன். எனக்கு உறுதியான எண்ணம், மனநிலை உண்டு எதற்கும் அஞ்சமாட்டேன்.   

அதேவேளை, கடந்த காலத்திலும் சரி... அதிமுக ஆட்சி செய்தபோதும் சரி... இப்போது சரி... மத்தியில் இருக்கும் (பாஜக) யாரும் நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் தரவில்லை. நமக்கு (அதிமுக) நன்மைதான் செய்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவை சிலர் கபளீகரம் செய்ய முயற்சித்தார்கள். அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். ஆனால், மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை   (அதிமுக அரசு ) காப்பாற்றி கொடுத்தது. அதற்கான நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். கூட்டணி சேர்வது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு. தேர்தலில் கட்சிகள் வெற்றிபெற வேண்டும். எதிரிகளை வீழ்த்த வேண்டும் அதற்கு ஏற்றார்போல் அரசியல் வியூகம் வகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாம் கூட்டணி அமைக்கிறோம்

என்றார்.   

Tags:    

மேலும் செய்திகள்