35 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை... மனவேதனையில் ஐ.டி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு
வீட்டில் இருந்தே பிரவீன் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.;
ஈரோடு,
ஈரோடு வாய்க்கால் மேடு இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்தவர் சீராளன். இவருடைய மகன் பிரவீன் (வயது 35). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த பிரவீன் பெங்களூருவுக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக மன உளைச்சல் ஏற்பட்டு யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பிரவீன் நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
அப்போது அங்குள்ள கிரிக்கெட் மைதானம் அருகே இருக்கும் கிணற்று பகுதியில் பிரவீனின் செருப்புகள் கிடந்துள்ளன. இதை பார்த்த உறவினர்கள் பிரவீன் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரை தேடிப்பார்த்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த பிரவீன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.