கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 400 அதிகரிப்பு
பொதுவாக பள்ளிக்கூடங்கள், சமூகநலக்கூடங்களில்தான் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.;
கோவை,
பொதுவாக வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருப்பதில்லை. ஒரு வாக்குச்சாவடியில் 1,700 வாக்காளர்கள், மற்றொரு வாக்குச்சாவடியில் 900 என்பது போல் வாக்காளர்களின் எண்ணிக்கை பல இடங்களில் மாறுபட்டு உள்ளன.
தற்போது இந்த எண்ணிக்கையை ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற வீதத்தில் சரிசமமாக்க இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலுக்குள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் நடவடிக்கை தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற வீதத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தற்போது நிரந்தரமாக இந்த எண்ணிக்கையை 1,200 ஆக உயர்த்தி மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே அதைவிட கூடுதலாக வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் இருக்கும் அமைவிடங்களிலேயே கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இவற்றை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
பொதுவாக பள்ளிக்கூடங்கள், சமூகநலக்கூடங்களில்தான் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. அங்கு கூடுதலாக இருக்கும் அறைகளை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்று யோசித்து வருகிறோம். அந்த அமைவிடங்களில் கூடுதல் அறைகள் கிடைக்கவில்லை என்றால் அடுத்தடுத்த தெருக்களில் இருக்கும் பள்ளிகள் போன்ற வசதியான இடங்களை நாடுவோம்.
கோவை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்தம் 3,117 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளதால், வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 400 உயரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.