காரைக்குடி தொகுதியில் போட்டியா..? - சீமான் பதில்
ஆட்சியில் பங்கு என்பதை விஜய் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளதாக சீமான் தெரிவித்தார்.;
காரைக்குடி,
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். மேலும் 234 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தும் மாநாடு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடக்கும் எனவும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டம் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நிதி மேலாண்மையை எப்படி சமாளிப்பார்கள்? என்று தெரியவில்லை. ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. 4½ ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது. தேர்தல் வரும்போது இதை அறிவித்திருப்பதால் இது ஒரு வாக்கு அறுவடைதான். இருப்பினும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.
ஆட்சியில் பங்கு என்பதை விஜய் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். காரைக்குடி தொகுதியில் நான் நிற்பது குறித்து பிப்ரவரி 21-ந்தேதி அறிவிப்போம். அந்நாளில் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்போம். கூட்டணி என்பது எங்கள் கொள்கையில் இல்லை. கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய். ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றனர். மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிடாது.
இவ்வாறு அவர் கூறினார்.